கிறிஸ்துமஸ் & அருள் செபாஸ்டின் சார்
“மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்…
நல்ல மனிதர் நடுவில் குழந்தை வடிவம் பெறுகிறார்…”
கடலூர் புனித வளனார் பள்ளி அரங்கில், புரொஜக்டர் இரைச்சலையும் தாண்டி மிஸ் ஆக்னெஸ், தனது புடவைத்தலைப்பால் கண்ணீரைத் துடைத்தவாறே விசும்பிய சப்தம் — மூன்றாம் வகுப்பு மாணவனாக நினைவில் நிழலாடுகிறது…
பள்ளியில் என்னை கனிவான கண்டிப்பிற்குள்ளக்கிய மதர் சுப்பீரியர்,
ஆரம்ப பள்ளி நாட்களில் நிதமும் அலுமினிய டிபன் பாக்ஸ் திறந்து தரும் தாட்டியான அன்னமேரி அக்கா,
பள்ளி முடித்து பல வருடங்கள் கடந்தபோதும், பார்த்த போதெல்லாம் பழைய பாசத்தில் என் கன்னம் திருகி, நலம் விசாரிக்கும் மேவீஸ் மிஸ்,
ரிக்க்ஷா ஓட்டிய லூர்து அண்ணன்,
“பச்சைக் கிளி ஓடும் , பறந்தது பறந்து பாடும்
குண்டு மாம்பழம் தேடும் , கூண்டில் அடைத்தால் வாடும்…”
–என்ற குழந்தைப் பாடலை அபிநயத்தோடு எனக்கு சொல்லித்தந்து நான்கு வயதில் என்னை மேடை ஏற்றி, அரங்கேற்றம் செய்து முதல் கைத்தட்டல் பெற்றுத்தந்த மிஸ் ஃபெல்சி…
—எல்லோரும் எண்ணத்தின், நினைவுகளின் இடுக்குகளில் இருந்து ஒவ்வொரு கிருஸ்துமஸ் தினத்திலும் வரிசையாக வந்து வாழ்த்து பரிமாறி செல்வார்கள்.
“மாசற்ற மனம் பயில்வோம்…
மதி துலங்க –அதிநுட்ப கலை கொள்ளுவோம்… “
– ஒவ்வொரு கிறிஸ்துமஸ் தினமன்றும் ….
வெள்ளை சட்டை , பச்சை கால்சராய் அணிந்து, புனித வளனார் பள்ளி மாணவனாக வரிசையில் நின்று, கண்கள் மூடி பாடுகிறேன்.
எனது பதின் வயது பள்ளி நண்பர்கள் நவீன் நைஜில் எடிசன், ஜான்,இருதய ராஜ், சேவியர் பாப்டிஸ்ட்,… மென்மையான குரலில் என்னை நலம் விசாரித்து புன்னகைக்கிறார்கள்.
எதிர் வீட்டு நவீனின் அப்பா புனித தாவீது பள்ளித் துணைத் தலைமையாசிரியர் பிராங்க்ளின் சார் புல்லட் வாகன சப்தம் கேட்க, செல்லப் பிராணி டைகர் கூடவே பாய்ந்து விரைகிறது….
நண்பன் நவீனின் அம்மா அரோரா டீச்சர் தலையின் வலப்புறத்தில் ரோஜாப்பூ செருகி, காட்டன் புடைவையில் என்னைப்பார்த்து மென் புன்னகை உதிர்த்த வாறே மொபெட் ஸ்டார்ட் செய்ய, வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருக்கும் நான் இருந்து மரியாதை நிமித்தம் இறங்கி நிற்கிறேன்…
பறவைகள் சப்தமெழுப்ப, ஒவ்வொரு வீட்டு சிறு தோட்டத்திலும் டிசம்பர் பூக்கள் வெளிர் ஊதா நிறத்தில் , மார்கழிப் பனிக்காற்றில் அசைந்து ஆடிக்கொண்டிருக்க, ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் பூசணிப்பூ மையமாக வைத்த வண்ணக் கோலங்கள்…
“தட்டுங்கள் திறக்கப்படும்… கேளுங்கள் கொடுக்கப்படும்…
கேளுங்கள் கிடைக்குமென்றார்… ஏசு கேளுங்கள் கிடைக்குமென்றார்…”
—பாட்டொலி கேட்கும் எண்பதுகளின் கிருஸ்துமஸ் தினம்.
===================
மனசுக்குள் உறைந்து போன காலம் ஒவ்வொரு கிருஸ்துமஸ் தினத்திலும் உயிர்ப்பித்தெழுகிறது. எழுபதுகளின் மத்தியில் இருந்து, எண்பதுகளின் இறுதி வரை கிருஸ்த்துவ பள்ளிகளில் படிக்கும் பேறும், கிருஸ்த்துவ துதிப்பாடல்களின் கேட்டு வளர்ந்த சூழலும், ஒவ்வொரு வருட கிருஸ்துமஸ் நாளிலும் … மனசுக்குள் உறைந்து போன காலம் ஒவ்வொரு கிருஸ்துமஸ் தினத்திலும் உயிர்ப்பித்தெழுகிறது.
======================
என் பகுத்தறிவுக்கு எட்டியமட்டில்,
. எந்தப் பண்டிகையின் கொண்டாட்டமும் முழுமையாக மதத்தின் பாற்பட்டதல்ல.அரசியல் அல்ல. நீதிமன்ற கரிசனத்துக்காக காத்திருந்து கொண்டாடும் அவலத்துக்கு அவசியமற்ற மதம் தாண்டிய மனிதத்தின் நீட்சி.
அனுபவம்..,இனிப்பான அனுபவம். நினைவுகளின் நிகழ்வுகளின் அனுபவம் …
வாழ்வின் பொய்யான வெற்று பரபரப்பில் தொலைத்து, தவறவிட்ட எங்கெங்கோ வாழ்ந்து கொண்டிருக்கும் என் இனிய கிருத்துவ நண்பர்களுக்கும், என்னுடன் இன்று நட்பும், அன்பும் கொண்டு இருக்கும் இனிய நண்பர்கள் அனைவருக்கும், MERRY MERRY CHRISTMAS WISHES!!!
=====
அன்புடன் ஒரு மாணவனின் மடல்….
1980 களின் நடுவே, தமிழ் முகமும், தமிழ் நிறமும், பெல் பாட்டம் பேண்ட்டுமாக பஜாஜ் M 80 ஸ்கூட்டரில் வந்து ஸ்டெப் கட்டிங் சிகை யுடன் பள்ளியின் HEADMASTER அறைக்கு முன் வண்டியை நிறுத்தி நடக்கும் அருள் செபஸ்டின் சாரைப் பார்க்க ஒரு ரசிகர் குழுவே காத்திருக்கும்.
“நமக்கு இவர் தாண்டா அடுத்த வருஷம் மாத்ஸ் எடுப்பாரு… பயங்கர ஸ்ட்ரிக்ட்…” பத்தாவது படிக்கும் மாணவர்கள் எங்கள் வயிற்றுக்குள் பட்டாம் பூச்சி, வெட்டுக்கிளி …எல்லாம் பறந்து, துள்ளும். வகுப்பறை காரிடரில் எதிர்படும் போது, “குட்மார்னிங் சார்” பதிலாக அமைதியான, மென்மையான உதடு குவித்து, கீழிறங்கிய புன்னகையுடன் ஒரு கை உயர்த்தல்.
பதினோராம் வகுப்பு நாட்களில்… கணக்கு வகுப்புகள் ஒரு யாக சாலை போன்ற அர்ப்பணிப்புடனும், ஒரு ஒழுங்குடனும், சாக் பீஸ் கரும்பலகையில் நகர்கிற கீச்சு ஒலியும், செபஸ்டின் சாரின் குரலும் மாத்திரம் வகுப்பறையை நிறைத்திருக்கும். மாணவர்களிடம் இருந்து தூரம் அகலாமலும், நெருக்கமாய் அணுகாமலும்கணக்கு எனும் கசப்பு மாத்திரையை கவனமாக, கண்டிப்பாக இனிப்பெனும் இன்முகம் காட்டி எங்களுக்கு சேர்த்த எங்கள் நேசத்துக்குரிய ஆசிரியர் அருள் செபஸ்டின் ஒரு பன்முகத் திறமையாளர் என நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.
கணினி எனும் ஒரு விஷயம் கடலூருக்கு வந்த நாட்கள்… பள்ளி அலுவல் நேரத்துக்கு பின்னர், இரவெல்லாம் அமர்ந்து கணினி பயின்று, விற்பன்னத்துவம் பெற்றதும், மென்பொருள் பயன்பாடு கற்றதும், பள்ளி இலக்கிய மன்ற,கலைக் கழக விழாக்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தியதும், சமூக சேவை செயல் பாடுகளை முன்னின்று செலுத்தியதும்….
நமது பெருமைக்காக சொல்லவேயில்லை, நமது ஆசிரியர் செபஸ்டின் சார் அவர்களின் பெருமை உலகெங்கிலும் எல்லா இடங்களிலும் பெரும் பதவிகளையும் வகிக்கும் , பொறுப்பான, உண்மையான, நேர்மையான மனிதர்களாகவும், அதிகாரிகளாகவும் இன்று இருக்கும் அவரது மாணவர்கள் பலராலும் உண்மையாக்கப் பட்டிருக்கிறது. ஏறத்தாழ இருபத்தேழு வருடங்களுக்கு முன்பு அவரிடம் படித்த மாணவனாக எனக்கு ஒரு சிறு குறை. கடந்த நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால விடுப்பில் இந்தியா வந்திருந்த என்னால், மழை மற்றும் சில தவிர்க்க இயலாத காரணங்களால் கடலூர் வந்து பள்ளியையும், அன்பிற்குரிய ஆசிரியர்களையும், உதவித் தலைமையாசிரியராக பணி நாட்களின் நிறைவு நாட்களில் இருந்த அருள் செபஸ்டின் சாரையும் நேரில் கண்டு, பேசி, வணங்கி… வாழ்த்து பெற இயலாமல் போனது மனதுக்குள் சிறு குறையென தொடர்கிறது.
எத்தனை தொலைவில் இருந்தாலும், எத்தனை வருடங்கள் கடந்தாலும், எந்த நிலைக்கு உயர்ந்தாலும்…தாய் தந்தையின் சாயலும்,குணமும நம்முடனே வாழ்வெல்லாம் தொடந்து பயணிப்பது போல், நல்லாசிரியர்களின் வழிகாட்டலும், வார்த்தைகளும்… வருடங்கள் பல கடந்தும் எங்களுடன், எங்களுக்காக தொடர்ந்து பயணித்துக்கொண்டே… தான் இருக்கிறது. இருக்கும். அவ்விதமாக சார்… நீங்களும்… எங்களுக்காக, எங்களுடன், என்றென்றும்….
உங்களுக்கு இன்றிலிருந்து ஓய்வல்ல!
இன்று உங்கள் அடுத்த சாதனை அத்தியாயத்திற்கான துவக்கம்!!!
வாழ்த்துக்கள் !!!
(அருள் செபாஸ்டின் சார் … 2021 நவம்பர் மாதம் 2ம் தேதி ஒரு பகல் வேளையில் நம்மை விட்டு பிரிந்தார் என்ற செய்தியை அவரது ஒரே மகன் ஜெஃப்ரி தொலைபேசியில் அழைத்து சொன்னதில் இருந்து இரண்டு நாட்களுக்கு… நினைவில் சகலமும் அவராக… Sir you are living in our love)
Comments
No comment yet.