தீபாவளி
“தீபாவளி” சட்டென்று கடந்து போய் விட முடியாத அனுபவம்
எனவே,கடந்த வருட பதிவு – மற்றுமொரு முறை… இனிய நண்பர்களின் மீள் வாசிப்பிற்காக…
எத்தனை, எத்தனை தீபாவளி.
நமது பெரும்பான்மையான கொண்டாட்டங்கள் நினைவு சார்ந்தவை.பெரும்பான்மையான நினைவுகள் கொண்டாடத் தக்கவை.
“தீபாவளி”
எத்தனை, எத்தனை தீபாவளி…..
ஒரு மாதம் முன்பே எடுத்து, தைக்கக் கொடுத்த துணி வாங்க நாலைந்து முறை அலைந்தும் அலுக்காத தீபாவளி…
அம்மாவோடு அடுப்படியில் வியர்க்க, வியர்க்க அதிரசம் தட்டிக்கொடுத்து, விரல் இடுக்குகள் வெல்லப்பாகு பிசுபிசுக்க, பாமாயில் வெக்கையை சுவாசித்து, சுவாரஸ்யம் கூட்டிய தீபாவளி…
அப்பாவின் சைக்கிளில், கேரியரில் அமர்ந்து மடியில் ஒயர் கூடையில் கனக்கின்ற பட்டாசும், மத்தாப்பாய் மகிழ்ச்சி தெறிக்கும் மனசுமாய், வீடு சேர்ந்த தீபாவளி…
வாங்கிய வெடியை முறத்தில், தந்தி பேப்பர் தளமிட்டுப் பரத்தி மொட்டை மாடி வெயிலில் காய வைத்து காவல் காத்த தீபாவளி…
மேகம் பார்த்து, கண்களில் சோகம் கோர்த்து, மழைக்கு பயந்து, மனசு நனைத்த தீபாவளி…
அதிகாலை எண்ணைக் குளியலில், சீயக்காய் பொடி கண்களில் இறங்கி, சிவப்பு விழிகளில் சிவாஜி கணேசனாக வலம் வந்த தீபாவளி…
கொளுத்திப்போட்ட மத்தாப்பு கம்பியை மிதித்துத் துடித்து விந்தி நடந்த தீபாவளி…
மறுநாள் தீபாவளி…காலை, எப்போது விடியும்… என உள்ளே சரவெடி சத்தம் சங்கீதம் கூட்ட, ஏக்கம் பொங்கி தூக்கம் தொலைத்த தீபாவளி…
ஏடாகூடமாய் தெறித்து வந்த சரவெடித் துணுக்கு, புதுச் சட்டையில் பொட்டு வைக்க, வீட்டில் மறைத்து, மறைத்து மகிழ்ச்சி மறைந்த தீபாவளி…
வெடிக்க மறுத்த நாட்டு வெடி , மறுபரிசீலனை செய்த அணுகிய கணத்தில் வெடித்துத் தொலைக்க, கையும், காதும் கனத்துக் கிடந்த தீபாவளி…
கையில் இனிப்பும், உதட்டில் சிரிப்புமாக, சேறு,சகதி, மழைநீர் தவிர்க்க கணுக்கால் வரை உயர்த்திய பட்டுப்பாவாடையில் எங்கள் தெரு அழகிகளின் கொலுசு கால்களை கண்களால் மொய்த்து, கனவுகளில் கரைந்த பதின்வயது தீபாவளி…
தூக்கு வாளிகளும், பைகளும் சைக்கிளின் இரண்டு ஹான்ட் பார்களிலும் பலகாரங்கள் சுமந்து கனக்க சைக்கிள் ஒட்டி, குறைந்தது பதினைத்து அன்பர்களின் வீட்டிற்காவது சென்று அன்பும், இனிப்பும் பகிர்ந்து, மனசு நிறைத்த தீபாவளி…
நாயகன் வெளிவந்த கடலூர் பாடலி அரங்க வாசலில், வளராத மீசையை வலுக்கட்டாயமாய் வழித்து கமலஹாசனாய் கற்பனை செய்து, கமறல் குரலில் “தென்பாண்டிச் சீமையிலே…” பாடல் முணுமுணுத்த பதினாறு வயது தீபாவளி…
மொத்த குடும்பத்துக்கும் துணியெடுத்து, அரசுப் பேருந்தின் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து காற்றின் வேகத்தில், மனசும் பறக்க, கண்ணின் நீர் கன்னத்தில் உருள, ஊர்திரும்பிய இருபது வயதுகளின் தீபாவளி…
எத்தனை, எத்தனை தீபாவளி…
அத்தனையும்… இணையம் இல்லா, முகநூல் இல்லா, தீபாவளிகள்.
தமிழர் விழாவா? வந்தேறிகளின் கொண்டாட்டமா? — அறியாத,புரியாத நாட்களில், அனுபவம் சேர்த்த தீபாவளிகள்.
திர்ஹாம் பார்க்காத நாட்களின் தீபாவளிகள்…
ஆனால், அன்பால் நனைந்த தீபாவளிகள். உறவுகள் சூழ்ந்த, உணர்வில் உறைந்த தீபாவளிகள்.
என்னைப் பொறுத்த மட்டில்,
தீபாவளி என்பது நரகாசுரவதமோ… நாராயண வழிபாடோ… இயற்கைக்கு நன்றி கூறும் நாளோ, மறைக்கப்பட்ட மகாவீரர் நினைவு நாளோ …அரசியலோ அல்ல. அனுபவம்,இனிப்பான அனுபவம்… இனிய நிகழ்வுகளின் அனுபவம் …
மூவர் மட்டுமே முகம் பார்த்து, சிரித்து, சினந்து, சிலிர்த்து,மகிழும், இந்த அமீரக,அடுக்கக வாழ்வில், எத்தனை , எத்தனை சொல்லியும் என்னால் புரிய வைக்க முடியவில்லை.அந்த தீபாவளிகளின் சந்தோஷத்தின் சாரத்தை மட்டும், சாறாய்ப் பிழிந்து என் மகனுக்கு சுவைக்கக் கொடுக்க முயன்று, முயன்று முழுதும் தோற்கிறேன்.
அந்த சந்தோஷத்தை இனம் காட்ட,
ஒரே.. ஒரு முறையேனும் அந்தநாட்களின் தீபாவளி மறுபடி வருமா?
Comments
No comment yet.