yaavarumkealir yaavarumkealir yaavarumkealir
Navigation
  • முகப்பு
  • அறிமுகம்
  • காணொளி
  • படைப்புகள்
  • பேச்சு
  • தொடர்பு

தேனீ – “ஏன் மறந்தாய் மனிதா”

honeybeejpg


ரீங்காரம்… ஒலித்தது எனது காதோரம்…
திரும்பினேன்.

“சுறுசுறுப்பிற்கு நீ அடிக்கடி சுட்டும் தேனீ நான்!
நண்டுக்கும் வண்டுக்கும் நாலறிவு என்றவனே…
நாலறிவன் நானுரைக்கிறேன்…
வாலறிவன் தான் தான் என்று செருக்கித் திரிந்தவன் நீ…
வால் நறுக்கி  உனது இல்ல வாசல் அடைத்தது இயற்கை.

உனது ஆறாம் அறிவு,உனது மொழி, 

உன்னத கண்டுபிடிப்பு,
நிலம், ஆணவம்,ராணுவம், அகந்தை,
அத்தனையும் அர்த்தமிழந்தது இன்று…
பார்வைக்குத் தெரியாத பகையைக் கூட வெல்ல இயலாதவன் நீ…
பிறர் துன்பம் அறிந்து கொள்ள முயலாதவன் நீ…
கற்றால் உடன் மறந்தவன் நீ…
இன்று… தொற்றால் வாடித் துவண்டவன் நீ…

நன்றி உனக்கு…
இன்று…
மனிதன் வாரா தோட்டங்களில்
மலர்கள் அதிகம் பூக்கின்றன…
மனம் போல மகரந்தச்சேர்க்கை நடக்கிறது…
சேதாரமில்லாமல் சேர்த்ததேன் கூடடைகிறது…

மனிதா… உன் பாதம் பட்ட
தரையில் புற்கள் கூட முளைப்பதில்லை
எங்கள் ஐந்தேஆண்டு வாழ்வுக்கிணையாய்
நீ ஆயுள் முழுதும் கூட உழைப்பதில்லை
====

 

லட்சம் பூக்கள் தொட்டு,
எமது எச்சில் துளிகள் பட்டு,
களமாடி சேகரம் செய்த தேனைக்
களவாடிக் குடிப்பவன் நீ…உறவாடிக் கெடுப்பவன் நீ…

 


சுறுசுறுப்பு வேறு… பரபரப்பு வேறு…

அறிவாயா?
ஒரு கோடி- மலர் நாடி -ஒரு ஜாடி
தேன் சேர்க்க… ஆயிரமாயிரம் மைல்கள் பறப்போம்- அது சுறுசுறுப்பு!
வேலை என்ன? வேண்டியதென்ன?
காலை என்ன? கடும்பகல் என்ன?
காரிருளென்ன? பணம் புகழ் தேடித் திரிவாய்.– அது பரபரப்பு!
======
மனிதா…
இயற்கை -செழிக்க நாங்கள்…-அழிக்க நீங்கள்…
பட்டியல் வேண்டுமா?
காய்கள், கனிகள் மொத்தக்கணக்கில்
மூன்றில் ஒன்று எங்கள் உழைப்பு…
வனங்கள், வளங்கள், சுற்றுச் சூழல்,
வான்மழை சிறப்பும் எங்கள் உழைப்பு…
தேனின் சுவையும், பருத்திப் பூவும்
பல்லுயிர் பெருக்கமும் எங்கள் உழைப்பு…

உமது???
நீர்நிலை அழித்தல், நில வளம் சுரண்டல், நெகிழிக் கழிவு,
கானகம் கவர்தல்…விஞ்ஞானம் வளர்ப்பதாய்,
அஞ்ஞானம் பெருக்கல்…அறிவியல்… பெயரால்
அறிவினை … மறத்தல்… இத்தனையும், அத்தனையும்
மனிதனுன் பிழைப்பு…
=====
எங்கள் கூட்டுக்கொரு முறை வா…
பாடம் கற்க பற்பல உண்டு
நேர்த்தி கற்கலாம்… நெருக்கம் கற்கலாம்…
பொறுமை கற்கலாம்…ஒற்றுமை கற்கலாம்…
ஒற்றை ராணியை கூடே போற்றும்
பெண்ணின் பெருமை கூட கற்கலாம்…
எங்களிடம், தேடிக் கற்க கோடி இருந்தும்,
தேனைக் கவர, கவர்ந்ததை விற்க அலைவதுன் மனது…
====
மனிதா… எத்தனை சொல்லியும், ஏற்காத குணம்
பாவம், பழி ஏதும் பார்க்காத மனம்
அயினும் வேண்டுகோள் ஒன்று…
புவிசாயும் ஆபத்து என்பதால் – உனது
செவி சாய்க்க கேட்கிறேன்
கூட்டம் கூட்டமாய் அழிந்து போகிறோம் –
பூக்களுக்கு ஏன் பூச்சிமருந்து?
நீ தெளித்த மருந்தில்
குளித்த மலர்களில்
துளிர்த்த துளி விஷமறியாது
தேனென அருந்தி, நினைவு தப்பி, வசிப்பிடம் மறந்து, வழிதடுமாறி…
கொத்துக் கொத்தாய் செத்து
மடிகிறோம்…
====
உயிர்பயமேதுமில்லை…
சுயநலமேதுமில்லை…
தேன் என்பது இன்னொரு தாய்ப்பால்…
தேடித்தேடி தேறல் தந்தோம்
தேரா மனிதா…
உன்னை மாற்றுவது எளிதா?
===
தின்று தீர்ப்பதற்கே உலகை அழிப்பவன்…
கன்றுக்கே கொடுக்காமல் பாலைக் கறப்பவன்…


ஈக்கள், எறும்புகள், பூச்சிகள்,பறவைகள்… 

எல்லோரும் இணைந்து வாழ்கிறோம் இங்கு
எமக்கும் உண்டு உலகில் சமபங்கு
சொல்லிப்பயனில்லை இது-
செவிடன் காதில் ஊதிய சங்கு!

May 7, 2022 / கவிதை

Comments

No comment yet.

Cancel reply
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Next Post
  • Previous Post

Categories

  • Uncategorized (2)
  • கட்டுரை (4)
  • கவிதை (3)

Recent Posts

  • கலைஞானி கமல்
  • “விக்ரம்” விமர்சனம்
  • கிறிஸ்துமஸ் & அருள் செபாஸ்டின் சார்
  • தீபாவளி
  • “பார்க்கட்டும்… ஆகலாம்” -கர்மவீரர்
  • தேனீ – “ஏன் மறந்தாய் மனிதா”
  • இந்தியக் குடிமகன் – APJ அப்துல் கலாம்
  • கமல்ஹாசன்
  • ராஜாதி ராஜன் இந்த ராஜா

காப்பகம்

  • July 2022
  • May 2022
  • April 2022
Website Viewers: 162
Yaavarum Kealir © 2023. All Rights Reserved.