ராஜாதி ராஜன் இந்த ராஜா
பண்ணைபுரத்து சித்தன்… பாமரருக்கும் பாட்டிசைத்த புத்தன்
பாவலரின் இளவல் – இசைக்கூட்டாளி – இசையை பொதுவுடமையாக்கி -பந்திவைத்த பாட்டாளி!
“ரூப் தேரா மஸ்தானா…” என முணுமுணுக்கத் தொடங்கிய தமிழ் உதடுகளில் அன்னக்கிளி ” -யை அழுத்தமாய் பதித்தவன் நீ.
தமிழை சலவை செய்தவன் பாரதி! தமிழிசையை சலவை செய்தவன் நீ!
சொல் புதிது .. பொருள் புதிது… சுவை புதிது … என்பான் பாரதி
இசைஞானி உனது இசை புதிது … ஓசை புதிது…மெட்டு புதிது… தாளக்கட்டும் புதிது!
வெள்ளிக்கொலுசு ஒலிக்க வீட்டுத் தாழ்வாரத்தில் நடந்த தமிழ்த் திரையிசை -உன் வரவால் -வயல் வரப்புகளில் தண்டையணிந்து நடை போட்டது.
சாதிக்குள் வைத்திருந்த சங்கீதத்தை -வீதிக்குக் கொண்டுவந்து
சாதிக்கச் செய்தவன் நீ…அரை நூற்றாண்டாய் இசையை ஆதிக்கம் செய்தவன் நீ!
உனது ஹார்மோனியம் இசைத்தால்,கேட்கும் யார்மேனியும் வசமிழக்கும்.
உன் குழலோசை கேட்டால் எங்கள் உயிரோசை உற்சாகம் கொள்ளும்
உன் கம்பி வாத்தியங்கள்காதோடு பேசுகையில் எங்கள் நாடி நரம்புகள் நாண் ஏற்றி “அன்பு” தொடுக்கும்
ஒரு மருத்துவ ஆய்வறிக்கை சொல்கிறது…கடந்த 30 ஆண்டுகளில் இந்தியப் பெருந்தேசத்தின், மாநிலங்களில்,மனநல பாதிப்பு குறைந்த மாநிலம் தமிழகம்என்று ! வியப்பேதும் இல்லை!
இசைஞானி – உனது இசையால் எமது வாழ்வில் சுவை நிறைத்தவன் நீ. எங்களின் மனச்சுமை குறைத்தவன் நீ…
எமது வாழ்வின் வருத்தங்களை இசைகொண்டு திருத்திய … குணநலமருத்துவன் நீ.
நீ ஞான தேசிகன் … இசை ஞானி… ராகதேவன் ஆயிரம் உண்டு உன்பற்றி அடுக்க…
இங்கு யாருண்டு உன்போல் இயல்பாக பாட்டெடுக்க…
உன்பாட்டேடுத்து … உனக்கு வாழ்த்து சொல்ல வரிசையாய் இசைக்குயில்கள் அங்கு..
உதிர்ந்த ஒரு சிறகாய் காற்றின் பக்கங்களில் கவிபாடித் தேடுகிறேன் உன்னை நான் இங்கு!!
Comments
No comment yet.