கமல்ஹாசன்
நூற்றாண்டின் கலைஞன் கமல்ஹாசன
இரண்டாம் வகுப்பு விடுமுறை காலம் என்பதாக நினைவு. நினைத்தாலே இனிக்கும் திரைப்படம் கடலூர் கமலம் திரை அரங்கில், புதிதாய் திறக்கப்பட்டு முதல் படமாய் திரையிடப் பட்டிருந்தது. அந்த சிவப்பான, ஸ்டெப் கட்டிங் வைத்த,வெளிர் நிற கண்விழிகள் கொண்ட அந்த இளைஞன், முன்பே திரையில்அவள் ஒரு தொடர்கதை, அவர்கள் திரைப்படங்களில் எனக்கு அறிமுகமான இளைஞன் தான் என்ற போதும், என்னை முழுமையாக சுவீகரித்துக் கொண்டது 1979-ல். அந்த வயதுகளில் புரியாத நடிப்பு, புரியாத சிக்கலான பாத்திரப் படைப்பு என்றாலும், அந்த இளைஞன் எனது பால்ய கால நினைவுகளில் பதிந்து போனது, எனது ரசனைத் தளம் நல்வழியில் விரிவடைந்ததற்கான மூலக்கூறு. நேர்த்தி… நேர்த்தி … நேர்த்தி…திரைக்கலையின் உச்ச நேர்த்தியைத் தொட அரைநூற்றாண்டாக இடையறாது முயன்றுகொண்டே இருக்கும் பெருங்கலைஞன். காண்போரின் எதிர்பார்ப்பிற்கு சற்றேனும் அதிகமாக திறன் காட்டி வியக்கச் செய்யும் முனைப்பை ஒரு மனிதன் அலுப்பின்றி இத்தனை காலமா தொடந்து நிகழ்த்த இயலும்?
கமல்ஹாசன் – அந்த ஆச்சரியமான கலைஞன் அன்று வந்து எனக்குள் அமர்ந்தது திரையின் ஊடாக என்றாலும், இன்று வரை அரியாசனம் இட்டு நிலைத்து இருப்பதற்கு திரை மட்டுமே காரணமல்ல. அவரது வாசிப்பார்வம், அமைதியான ஆனால் வலுவான சமூக, அரசியல், அறச் சீற்றம், கவித்திறம், உறுத்தாத பகுத்தறிவு, உலகின் எந்த கலை வடிவத்தின் ரசிகனாக,ஆராதகனாக போய்ச் சேர்ந்தாலும் அந்த அரங்கில் கமல்ஹாசனுக்கு என தனி இருக்கை இட்டு வைக்கப்பட்டு இருப்பது… என கால் நூற்றாண்டுக்கு மேல், இன்று வரை தொடரும் ஆச்சர்யம்.
இந்த பெரும் கலைஞனின் ரசிகர் மன்றத்திலோ, நற்பணி இயக்கத்திலோ நான் இருந்ததில்லை… ஆனால் செய்யும் ஒரு பணியை வேறெவரை விடவும் சிறப்பாய் செய்ய விழைவேன்…என்ற முனைப்பை, தகுதியைக் கொடுத்தது இந்த பெருங்கலைஞனின் ரசிகன் என்பதில் பெரும் பங்கு இருக்கிறது என்பதே பேருண்மை.
என் நண்பர்கள் பலரும் இயல்பாக திரு.கமல்ஹாசன் அவர்களின் அன்பு ஆராதகர்களாக அமைந்தததில் எனக்கு நெஞ்சம் நிறைந்த மகிழ்ச்சி…
அன்பிற்குரிய கமல்ஹாசன் அவர்களுக்கு… உங்கள் மீதான விமர்சனங்கள் தனிப்பட்டவைகள்… ஒரு சகோதரனின் உரிமையுடன் சொல்லப் பட வேண்டியவைகள். ஆனால், அன்பும், வாழ்த்துக்களும்,நெகிழ்வுக்கான விஷயங்களும்…நிறைய…நிறைய…இருக்கின்றன.
“ரசிகர்களால் விமர்சிக்கப்படுவதும், விமர்சகர்களால் ரசிக்கப்படுவதும் கமலுக்கு மட்டுமே சாத்தியமாகக்கூடியவை” – வாழ்த்துகிறேன்… வாழ்த்துகிறேன்….62- ம் ஆண்டு பிறந்த தினத்தில், உங்கள் மனதிற்கினிய பயணம் தொடர்வதற்கும், நாங்கள் மகிழ்வதற்கும், அனைத்து தமிழ் சொந்தங்களும் பெருமைப்படும் வெகு சிலவற்றில், ஒன்றாக இருக்கும் கலைஞன்…. கவலைகள் களைந்து கலையுடன், நலமுடன் என்றென்றும், வாழவேண்டும்.
(2014-ல் இட்ட பதிவு சில சேர்க்கைகளுடன்…)
–Sasi.S.Kumar-
அன்றொரு நாள் கடலூரில் பெருங்கலைஞன் கமல்ஹாசனுடன்…
1989 – பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் நிறைவு பெற்று, தினமும் மருத்துவ பொறியியல் சேர்க்கைக்கான புகுமுக தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு சைக்கிள் மிதித்து சென்று கொண்டிருந்த நாட்கள். கடலூர் நகர், கிருஷ்ணாலயா திரையரங்கில் அபூர்வ சகோதரர்கள் திரைப்படம் வெளிவந்த கோடைகாலம். ஏறத்தாழ ஏழு முறை பார்த்தும் அலுக்காத கமல்ஹாசனின் ரசிகனாக வளராத மீசையை மழித்து, இல்லாத புஜபலம் காட்ட முனைந்து கொண்டிருந்த பால்யம் .
கமலே நானாக, நானே கமலாக மாறத்துடித்த காலங்கள் அவை. உடைந்த குரலில் “என்ன பத்தி யாருன்னு ஊரக் கேளப்பா … ” என்று பாடிக்கொண்டே சைக்கிளை கோலமாவு விற்கும் பாட்டியின் மேல் மோதி, வாங்கிய வசவில் எனது மூன்று தலைமுறைகளின் தலைகள் உருட்டப்பட்டதெல்லாம் வேறு சோகம்.
கடலூர் மாநகரில் “வருவான் வடிவேலன்” திரைப்படத்திற்கு பிறகு நூறு நாட்கள் ஓடிய திரைப்படமாக “அபூர்வ சகோதரர்கள்” வரலாற்று தடம் பதித்தது. பதின் வயது பதின் வயது பால்யர்கள் இரு குழுக்களாக பிரிந்து வீட்டு அடக்குமுறைகளுக்கு உட்பட்ட எல்லைக்குள் தத்தமது ஆதர்சங்கள் ரஜினிக்கும், கமலுக்கும் தெருமுனை விளக்குக கம்பங்களில் சின்னச்சின்ன பதாகைகள் வைத்து சிலிர்த்துக்கொள்ளும் நாட்கள் அவை. எனது ஆதர்ச நாயகனின் திரைப்படம் நூறு நாட்கள் கண்டதை கொண்டாடி, சாக்லெட் வாங்கி விளம்பி புல்லரித்த ஒரு நாளில் அந்த “தகவல்” ஒரு நற்செய்தியாக வந்து செவி சேர்ந்தது.
“நூறாவது நாள் விழாவுக்கு கமலஹாசன் வர்றாராம் … கிருஷ்ணாலயா தியேட்டரிலேயும், ரெட்டியார் கல்யாண மண்டபத்திலயும் கூட்டத்துல பேசறாராம் …” எட்டாத உயரத்தில் திராட்சை … புளித்தது. அத்தனை கூட்டத்தில் நின்று பார்க்க வீட்டில் அனுமதி கிடைக்குமா… கிட்டாதாயின் வெட்டென மற. மறந்தேன்.
“சசி… ஞாயிற்று கிழமை மத்தியானம் ரெடியா இரு. கடலூருக்கு கமல் வர்றாரு .. நாம போய் பாத்துட்டு வரலாம் ” அப்பா கடலூர் தினத்தந்தியில் உதவி ஆசிரியர்..
அன்றிரவு சாம்பார் சாதம் பிசைந்த கைகளுடன் உணவுக்கு மத்தியில் என்னிடம் சொல்ல, எனது கால்கள் தரையில் இருந்து மெல்ல நழுவின.
செய்தி ஆசிரியர் திருச்சி பாரதன் அவர்களின் பலாப்பழம் , அப்பாவின் ஆசை நாடகங்களில் கமலஹாசன் சிறுவனாக நடித்திருந்த பழக்கத்தால் அவர் ஒருமையில் அழைக்கும் அளவு கமலிடம் நெருக்கம்.
ஒரு கணத்தில் சகலமும் புரிந்தது…
இரவெல்லாம் கனவுகளில்
“சசிகுமார் … நைஸ் டு மீட் யு …” கை குலுக்கும் கமலஹாசன்.
“காலை இப்படி மடிச்சு, ஷூவை இப்பிடி பிக்ஸ் பண்ணிட்டா … குள்ளமா தெரியும் … இங்கே பாரு ” என்னிடம் அப்பு ரகசியம் சொல்லும் கமலஹாசன்.
“வெள்ளை ஜிப்பாவில் …”வந்தாள் மகாலட்சுமியே…” எனப்பாடி சிரிக்கிற கமலஹாசன்.
அடுத்த இரண்டு தினங்களிலும் … கனவில் … மனதில் … கமலஹாசன் சுற்றிச்ச்சுற்றி மனதில் தட்டாமாலை சுற்ற …அந்த ஞாயிறு நண்பகல். கருப்பு நிற டீ ஷார்ட், வெளிர் சாம்பல் நிற PANT அணிந்து, தீவிர ரஜினி ரசிகனான தம்பி சிவசங்கரிடம் அப்போது வெளியாகி சற்று மந்தகதியில் ஓடிக்கொண்டிருந்த “சிவா” படத்தின் பாடலை நக்கலாக “…பாரு… பாரு… என்றேன் பார்த்தால் ஆகாதா?” என்று பாடி வெறுப்பேற்றி கமலைக் காண கார் (டாக்ஸி) ஏறினேன். தேவனாம்பட்டினம் விருந்தினர் மாளிகை முன்னால் திரண்ட கூட்டம் காருக்கு வழிவிட்டது. வரவேற்பறை அடைந்து, செய்தியாசிரியர், அவர் மகன், அப்பா,நான் ,மற்றும் சில பத்திரிகையாளர்கள் … புகைப்பட கலைஞர்கள். அவர் வந்தமரவேண்டிய இருக்கை காத்திருந்தது. சில நிமிடங்கள்… கிரேஸி மோகன், டெல்லிகணேஷ் … ஆகியோர் முன்னே வந்து நின்றனர். சில நொடிகளில் … பளிச்சென்று வெளிர் காக்கி நிற உடையில் சற்று கலைந்த தலைமுடியுடன் வந்து அமர்ந்த வெளிச்சம்… திரையின் காட்சிகள் கண்களை மறைக்கின்றன… “சசி எந்திரிச்சு நின்னு வணக்கம் சொல்லு ” தெரிந்த புகைப்பட கலைஞரான ஷக்தி அண்ணன் குரல் கேட்க, இயந்திரமாக எழுந்து கைகூப்பி வணக்கம் சொல்கிறேன்.
அமர்ந்த வெளிச்சம் எழுந்து வணக்கம் சொல்லி அமர்கிறது.
யார் யாரோ என்னென்னவோ அவரிடம் கேட்கிறார்கள். அவர் செய்தியாசிரியரிடமும், அப்பாவிடமும் தணிந்த குரலில் பேசுகிறார். முகம் மலர்கிறது. சற்று உடைந்த வரிசை தப்பிய பல் தெரிய சிரிக்கிறார். அப்பா அருகே அழைக்க எழுந்து செல்கிறேன்… செவி அடைத்துக் கொள்கிறது. என்னை யாரோ “அவரின் பெரிய ரசிகனென ” அறிமுகம் செய்கிறார்கள். கண்கள் பார்த்து புன்னகைக்கிறார். கைகளை பற்றிக் கொள்கிறேன்.
எதோ சொல்கிறார் … கேட்கவில்லை. இரண்டாம் முறையும் எதோ கேட்கிறார்… ஏதோ குழறுகிறேன்.புரிந்து கொண்டு புன்னகைத்து எனது கைகளை இறுக்கிக் கொள்கிறார்.
புகைப்படம் எடுக்கிறார்கள். தோள் தொட்டு வாழ்த்துகிறார். ஆட்டோகிராப் வாங்கிக்கொண்டு நன்றி கூட சொல்லாமல் வருகிறேன்…
வெளியே கூட்டம் நெரிகிறது. காரில் அமர்கிறோம்… மெல்ல ஊர்ந்து நகர்கிறது. வெளியே சுவர்களில் ராஜாவும்… அப்புவுமாக … நின்றுகொண்டிருக்கிறார்.
—– ஏறத்தாழ இருபத்தெட்டு ஆண்டுகள் கடந்த இன்றும் அதே ஆச்சர்யம் … கமல்ஹாசன். அந்த ஆச்சரியமான கலைஞன் அன்று வந்து எனக்குள் அமர்ந்தது திரையின் ஊடாக என்றாலும், இன்று வரை அரியாசனம் இட்டு நிலைத்து இருப்பதற்கு திரை மட்டுமே காரணமல்ல. அவரது வாசிப்பார்வம், அமைதியான ஆனால் வலுவான சமூக, அரசியல், அறச் சீற்றம், கவித்திறம், உறுத்தாத பகுத்தறிவு, உலகின் எந்த கலை வடிவத்தின் ரசிகனாக,ஆராதகனாக போய்ச் சேர்ந்தாலும் அந்த அரங்கில் கமல்ஹாசனுக்கு என தனி இருக்கை இட்டு வைக்கப்பட்டு இருப்பது… என கால் நூற்றாண்டுக்கு மேல், இன்று வரை தொடரும் ஆச்சர்யம்.
இந்த பெரும் கலைஞனின் ரசிகர் மன்றத்திலோ, நற்பணி இயக்கத்திலோ நான் இருந்ததில்லை… ஆனால் செய்யும் ஒரு பணியை வேறெவரை விடவும் சிறப்பாய் செய்ய விழைவேன்…என்ற முனைப்பை, தகுதியைக் கொடுத்தது இந்த பெருங்கலைஞனின் ரசிகன் என்பதில் பெரும் பங்கு இருக்கிறது என்பதே பேருண்மை.
அன்பிற்குரிய கமல்ஹாசன் அவர்களுக்கு… உங்கள் மீதான விமர்சனங்கள் தனிப்பட்டவைகள்… ஒரு சகோதரனின் உரிமையுடன் சொல்லப் பட வேண்டியவைகள். ஆனால், அன்பும், வாழ்த்துக்களும்,நெகிழ்வுக்கான விஷயங்களும்…நிறைய…நிறைய…இருக்கின்றன.
“ரசிகர்களால் விமர்சிக்கப்படுவதும், விமர்சகர்களால் ரசிக்கப்படுவதும் கமலுக்கு மட்டுமே சாத்தியமாகக்கூடியவை” – வாழ்த்துகிறேன்… வாழ்த்துகிறேன்….62- ம் ஆண்டு பிறந்த தினத்தில், உங்கள் மனதிற்கினிய பயணம் தொடர்வதற்கும், நாங்கள் மகிழ்வதற்கும், அனைத்து தமிழ் சொந்தங்களும் பெருமைப்படும் வெகு சிலவற்றில், ஒன்றாக இருக்கும் கலைஞன்…. கவலைகள் களைந்து கலையுடன், நலமுடன் என்றென்றும், வாழவேண்டும்.
Comments
No comment yet.